தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் பயிர் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளது.. சாகுபடிக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி ஸ்பிக் தனியார் உரத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 33 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா, 8250 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 9610 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் நவம்பர் மாத பயன்பாட்டுக்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த உர மூடைகளை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு உரமூடைகளை விவசாய பயன்பாட்டுக்காக வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து, வத்தல் உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த ராபி பருவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய பணிகளுக்கு மட்டும் 12 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் யூரியா தேவைப்படுகிறது. இந்த மாதத்திற்கு மட்டும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படுகிறது.
இவை ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ் ஆகியவை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் போது விவசாய சாகுபடிக்கு போதுமானதாக இருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உரங்களில் 60 விழுக்காடு தமிழ்நாட்டின் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இங்கு ஒரு நாளில் 3000 மெட்ரிக் டன் உரங்களை மூடை படுத்தி அனுப்ப முடியும்.
இவை சாலை வழியாகவும், சரக்கு ரயில்கள் மூலமாகமாகவும் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஓட்டப்பிடாரத்தில் 80 மில்லி மீட்டர் மழையும், திருச்செந்தூர் வழி 55 மில்லி மீட்டர் மழையும் மாவட்டத்தில் மொத்தம் 162 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் பரவலாக 32 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தாமிரபரணி நதியில் தற்போது 3,200 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க :திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம்