வாசல்
ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளையும், ஒரு மக்களவைத் தொகுதியையும் கொண்டது தூத்துக்குடி மாவட்டம். சட்டப்பேரவைத் தொகுதிகளில், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 5ம் பொதுத் தொகுதிகள், ஒட்டப்பிடாரம் தனித் தொகுதி.
தொகுதிகள் வலம்
தூத்துக்குடி: இத்தொகுதியில், 50 ஆயிரம் பேர் மீன்பிடிப்பு தொழிலிலும், 25 ஆயிரம் தொழிலாளர்கள் உப்பு விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளனர். வளர்ந்து வரும் இத்தொழில் நகரத்தின் முக்கிய பிரச்னை முறையான சாலை வசதி இல்லாதது, போக்குவரத்து நெரிசல்.
இங்குள்ள வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம், நான்கு வழிச்சாலை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் இன்னும் அறிவிப்பாகவே தொடர்கிறது. மாநகராட்சியில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால், சிறுமழைக்கே வெள்ளம் தேங்கும் நிலையே உள்ளது. பிரதான சாலையில் நீண்ட நாட்களாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம், அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படாத ஈஎஸ்ஐ மருத்துவமனை என தொகுதியின் தேவைகள் நீள்கின்றன.
திருச்செந்தூர்: மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருக்கும் இத்தொகுதியில் மீன்பிடிப்பு, உப்பு உற்பத்தி, விவசாயம் என மூன்று தொழில்களும் நடக்கின்றன. உடன்குடியில் தமிழ்நாடு அரசு அமைத்து வரும் மிகுமின் அனல் மின்நிலையம், குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படவிருக்கும் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் இந்தத் தொகுதியை முக்கியத்துவப்படுத்தினாலும், இதனால் கடல் வளம் பாழாகி, வாழ்வாதாரம் பாதிப்படையும் என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் நிலவுவதால், இத்திட்டங்களுக்கு எதிர்ப்பும் நிலவி வருகிறது.
இந்தத் தொகுதியிலும் சாலை வசதிகளும், கழிவுநீர் ஓடை வசதிகள் இல்லாததே பிரதான பிரச்னை. பிரசித்திப்பெற்ற, செந்தூர் முருகன் கோயிலும், முத்தாரம்மன் கோயிலும் உள்ள தொகுதி என்பதால் இங்குள்ள விழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.
அந்த நேரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாவது தொடர் கதையாக இருக்கிறது. இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் இத்தொகுதியின் மூன்றாம் நிலை நகராட்சியான காயல்பட்டினத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது நீண்ட கால குறையாகவுள்ளது.
கோவில்பட்டி: இத்தொகுதியின் பிரதான தொழில் மானாவாரி விவசாயம்; விவசாயத்திற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழில் நடைபெறுகிறது. கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் பிரசித்திப் பெற்ற கடலை மிட்டாய் சமீபத்தில் அதன் தனித்துவத்திற்காகப் புவிசார் குறியீடு பெற்றது.
சீவலப்பேரி - 2 பைப் லைன் திட்டம் மூலம் குடிநீர் பிரச்னையும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தபோதிலும், நலிவடைந்து வரும் தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாத்து, அத்தொழிலுக்கான மூலப்பொருட்கள் கிடைப்பதை எளிமைப்படுத்த வேண்டும், விவசாய விளைபொருட்களைப் பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பன தொகுதியின் தீர்க்கப்படாத பிரச்னைகளாகவுள்ளது.
விளாத்திகுளம்: கரிசல் மண்ணால் சூழப்பட்டுள்ள இத்தொகுயின் பிரதான தொழில் புன்செய் விவசாயம். இங்கு உற்பத்தியாகும் மிளகாய் வற்றலுக்குத் தனி மவுசு உண்டு. விவசாய விளைபொருட்களைப் பாதுகாத்து விற்பனை செய்ய விவசாயிகள் கோவில்பட்டி, தூத்துக்குடி நகரங்களிலுள்ள தனியார் குளிர் பதனக் கிடங்குகளையேச் சார்திருக்க வேண்டியுள்ளதால் நேரம், பண விரையம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தவிர்ப்பதற்காக விளாத்திகுளத்தில் அரசு குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதே போல அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு செய்யப்பட வேண்டும், விதைகள், விவசாய இடுபொருட்கள் மானிய விலையில் தங்குத் தடையின்றி கிடைக்கவும், நேரடி கொள்முதல் நிலையங்கள் நிறுவ வேண்டும் என்பதும் தொகுதியின் அத்தியாவசியத் தேவையாகவுள்ளது.
ஒட்டப்பிடாரம்: தனித்தொகுதியான இது மாவட்டத்தின் பெரிய தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. பெரும்பாலும், கிணறு, சொட்டுநீர் பாசனம் மூலமே விவசாயம் நடக்கிறது. இத்தொகுதியின் பிரதான பிரச்னை தண்ணீர் தேவை. இங்குள்ள கொம்பாடி ஓடையைப் புனரமைக்க வேண்டும், கல்லாறு, எப்போதும்வென்றான் நீர்தேக்கங்கள் தூர்வாரப்பட வேண்டும், காட்டாறாக ஓடிவரும் மழை நீரை சேமிக்க மலைப்பட்டியில் ஒரு நீர்தேக்கம் அமைக்க வேண்டும் என்பது இத் தொகுதியின் அத்தியாவசியத் தேவையாக உள்ளது.
ஒரு லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் ஜவுளி உற்பத்தி தொழிலுக்குப் பெயர் போன புதியம்புத்தூர் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படவேண்டும், வ.உ.சிதம்பரனார் பிறந்த ஒட்டப்பிடாரத்தில், நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்பதும் நீண்டநாள் கோரிக்கையாகும்.
ஸ்ரீவைகுண்டம்: தாமிரபரணி நதியின் கடைசி இரு அணைக்கட்டுகள் உள்ள இத்தொகுதியில் நெல், வாழை, வெற்றிலை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இங்கு நேரடி கொள்முதல் நிலையங்களும், விளை பொருட்களை சேமித்து வைப்பதற்குப் பதப்படுத்தும் கிட்டங்கி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கை.
மழைக் காலங்களில் கடலில் கலக்கும் தாமிரபரணியின் உபரி நீரை சேமிக்க ஸ்ரீவைகுண்டம் அணைக்கு அடுத்து, ஒரு தடுப்பணை கட்டவேண்டும் என்பதும், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்ஜிடி தண்ணீர் எடுப்பது தடுக்கப்பட வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை.
களநிலவரம் :
கடந்த காலங்களில் அதிமுகவின் கோட்டையாக இருந்த தூத்துக்குடி, தற்போது அந்த நிலையை இழந்திருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தன் பலத்தை இழந்துள்ள அதிமுக, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்குத் தாரை வார்த்த மூன்று தென்மாவட்ட தொகுதிகளில் தூத்துக்குடியும் ஒன்று.
ஆறு தொகுதிகளில், நான்கில் வெற்றி பெற்றிருந்த அதிமுக, கடந்த 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் தன்னுடைய ஆஸ்தான தனித் தொகுதியான ஒட்டப்பிடாரத்தை திமுகவிடம் இழந்தது.
இதனால், 3 : 3 என்ற கணக்கில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சமபலத்தில் உள்ளன. இழந்த அந்தஸ்தை மீட்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் அதிமுக ஒருங்கிணைந்த மாவட்டத்தை வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவையும், எம்எல்ஏ சண்முகநாதனையும் மாவட்டச் செயலாளர்களாக்கி நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது.
திமுகவைப் பொறுத்தவரையில் தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழியின் செயல்பாடுகள் கைகொடுத்தாலும், கட்சிக்குள் நிலவும் வடக்கு, தெற்கு ஊடல் ஒரு பின்னடைவாகவேப் பார்க்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் தூப்பாக்கிச் சூடு சம்பவம் இம்முறை பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாணை மூலம் ஆலை மூடப்பட்டிருந்தாலும், ஆலையின் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்படாதது மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் மீது அவநம்பிக்கையை முழுவதும் போக்கவில்லை.
விளாத்திகுளம் தொகுதியில் கணிசமான வாக்குகள் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ, பேச்சாளர் மார்க்கண்டேயன் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டது அத்தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியைப் பறித்தது. அவர் இப்போது திமுகவில் இணைந்திருப்பது திமுகவின் பலமாகப் பார்க்கப்படுகிறது.