வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு அடுத்த மூன்றாவது அணியாக அமமுக தலைமையிலான கூட்டணி உருவெடுத்துள்ளது. கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அதன்படி, இன்று அவர், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான சங்கரநாராயணனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ”தீய சக்தியையும், துரோக சக்தியையும் தேர்தலில் இருந்து அகற்ற வேண்டும். ஏற்கனவே நிதிச்சுமையில் தமிழகம் இருக்கும்போது, இலவச வாஷிங் மெஷின், பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது. எங்களது தேர்தல் வாக்குறுதியாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளோம்.
இது வளர்ச்சி நடைபோடும் தமிழகம் அல்ல, வீழ்ச்சி நடைபோடும் தமிழகம். கடந்த 5 ஆண்டுகளாக முறைகேடு ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகரைப் போன்று எதிர்த்து போட்டியிடும் அனைவரும் இங்கே டெபாசிட் இழப்பார்கள். மாற்று சக்தியாக அமமுகவிற்கே மக்கள் வாக்களிப்பாளர்கள். மக்கள் நிம்மதியான ஆட்சியை விரும்புகிறார்கள். இலவசங்களை அல்ல. மக்களின் கருத்துக் கணிப்பு என்ன என்பதையும், தேர்தல் முடிவு என்ன என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை! - சகாயம்