திருநெல்வேலி மாவட்டம் மணப்படை, மணல்காடு கிராமங்களைச் சேர்ந்த 31 விவசாய கூலித் தொழிலாளிகள் தூத்துக்குடி மாவட்டம் சவரிமங்கலம் கிராமத்திற்கு உளுந்து பிடுங்குவதற்காக டாட்டா ஏசி வாகனத்தில் (குட்டி யானை) சென்று கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீர் வரத்து ஒடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் ஈஸ்வரி (27) உட்பட சம்பவ இடத்திலேயே பேச்சியம்மாள் (30), மலை அழகு (48), பேச்சியம்மாள் (54), கோமதி (65) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதில் படுகாயமைடந்த ஆறு பேர் சிகிச்சைக்காக ஒட்டபிடாரம் அரசு மருத்துவமனைக்கும், மற்றவர்கள் பாளையங்கோட்டை மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் விபத்திற்கு சாலைதான் காரணமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "அவ்வாறு சொல்ல முடியாது. சாலைகளில் வேகத்தை சீரமைக்கவும், எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.
விபத்து தொடர்பாக ஓட்டுநர் சித்திரை என்பவரை கைது செய்து மணியாச்சி காவல் ஆய்வாளர் பட்டாணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: 'சாலை பாதுகாப்பு மாதத்திலும் விபத்துகள் தொடரும் அவலம்' - ஸ்டாலின் ட்வீட்