தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜுலை மாதம் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி மணிமேகலை என்ற மல்லிகா (63) என்பவர், அவரது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் அண்ணாநகர் 12ஆவது தெரு முருகன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் மல்லிகாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.
இது குறித்து தென்பாகம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கோவில்பட்டி காமநாயக்கன்பட்டி குருவிநத்தத்தைச் சேர்ந்த மரிய மைக்கேல் பிரான்சிஸ் (38) என்பவர் சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது.
உடனே காவல் துறையினர் அவரை கைது செய்து, அவரிடமிருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முனியசாமிபுரம் ஒன்றாவது தெருவில் கடந்த மார்ச் 2ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மூக்காண்டி மனைவி சோமசுந்தரி (28) என்பவரும், முனியசாமிபுரம் 2ஆவது தெருவில் சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் சோமசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் 10ஆவது (கிழக்கு) தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (32) என்பவர் சங்கிலியை பறித்தது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 சவரன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (39) என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றபோது தனது இரு சக்கர வாகனத்தை மருத்துவமனையின் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் வந்து பார்க்கும்போது, அதை யாரோ திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஏரல் அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் (31) மற்றும் சாயர்புரம் காட்டு சக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த பிரதீப் (28) ஆகியோர் திருடியது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேற்கண்ட மூன்று வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள 9 சவரன் தங்க நகைகளையும், இருசக்கர வாகனத்தையும் அதன் உரிமையாளர்களிடம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில், துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.