தூத்துக்குடி: தூத்துக்குடி மீளவட்டான் பகுதியைச் சேர்ந்தவர் லூர்து ஜெயசீலன்(41). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக சிப்காட் பகுதியில் தேநீர் கடை நடத்தி வந்தார். இவர் மீது ஒரு கொலை வழக்கும், ஏழு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இவர் மீது எந்த குற்ற வழக்குகளும் பதிவாகாத நிலையில், கடந்த 9ஆம் தேதி லூர்து ஜெயசீலன் சிப்காட் காவல் எல்லைக்குட்பட்ட மயானப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால், குத்தி கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லூர்துவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தனிப்படையினர் கொலை சம்பவம் நடைபெற்ற இடம் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
தலைமைக் காவலர் கைது
இதில், லூர்து ஜெயசீலனை, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய தலைமைக் காவலர் பொன்மாரியப்பன் (39), முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(39) என்பவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தலைமை காவலர் பொன்மாரிப்பனையும், மோகன்ராஜையும் கைது செய்த தனிப்படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட லூர்து ஜெயசீலன், கடந்த 1998 ஆம் ஆண்டு அழகு என்ற ரவுடியை கொலை செய்துள்ளார். இந்த கொலைத் தொடர்பாக, அப்போது வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட அழகு தற்போதைய மத்திய பாகம் காவல் நிலையத்தின் தலைமை காவலரான பொன்மாரியப்பனுக்கு தாய்மாமா.
தனது மாமா அழகின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக, லூர்து ஜெயசீலனை கொலை செய்ய திட்டமிட்டு மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து தலைமைக் காவலர் பொன்மாரியப்பன் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவி பதிவுகளைக் கொண்டு துப்பு துலக்கி கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
இதையும் படிங்க: வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு: 6 பேர் கைது