தூத்துக்குடி: மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டுமென வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் கண்டித்து, தூத்துக்குடி அரசு உதவி பெறும் வ.உ.சி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில், 1,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து இன்று (அக்.18) போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில், "ஒன்றிய அரசே, மோடி அரசே, இந்தி மொழியை திணிக்காதே. இந்தி மொழியை புகுத்தாதே" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மாணவர் சங்க செயலாளர் கார்த்திக் கூறுகையில், 'இந்திய திருநாட்டின் பன்முக தன்மையை சிதைக்கும் வகையிலும், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் பல்கலக்கழகங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்தியை கொண்டு வரவிட மாட்டோம். தமிழ்நாடு மக்கள், மாணவர்களும் இந்தியை எதிர்த்து வருகிறார்கள். மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டுமென கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்வு எழுத இந்தியை கொண்டு வரும் பட்சத்தில், தமிழ்நாடு மாணவர்களுக்கு மத்தியில் வட மாநில மாணவர்கள் வெற்றி பெறுவர். அதனால், தமிழ்நாடு மாணவர்களின் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது. ஆகவே, மத்திய அரசு இந்தியை கைவிட வேண்டும்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: வீடியோ: ஓடும் பேருந்தின் மேற்கூரையில் நின்றுகொண்டு பெண்களிடம் "மான் கராத்தே" போஸ்