தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகராட்சி சார்பில் புதிய கூடுதல் பேருந்து நிலையம் மற்றும் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் தற்காலிக தினசரி சந்தையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார். பின்னர், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை தற்போது கரோனா பாதித்த 17 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கரோனா வைரஸ் பாதித்து குணம் பெறுபவர்கள் அதிகம். அரசு எடுத்து வரும் நடவடிக்கையாலும், மருத்துவ பணியாளர்களின் சேவையாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அம்மா உணவகம் வழக்கம்போல் எவ்வித அரசியல் அழுத்தங்களும் இல்லாமல் இயங்கி வருகிறது. அங்கு விலையில்லாமல் உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நிர்வாகம் மூலமாக செய்ய வேண்டிய பணிகளை செய்து தான் ஆக வேண்டும். அவர் நிர்வாகத்தில் இல்லையே என்ற ஏக்கத்தில் பேசுகிறார். ஏக்கத்தின் மூலமாக அவருக்கு ஏதாவது காய்ச்சல் வராமல் இருந்தால் சரி “ எனக் கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஊரடங்கை மீறிய சுமார் 3ஆயிரம் பேர் கைது: 1,407 வாகனங்கள் பறிமுதல்!