தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நேரடியாக ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது.
கடந்த மாதம் 13 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 420 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, டேங்கர் லாரிகள் மூலம் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படுகின்றது.
இந்நிலையில், கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு நேரடியாக சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பி அனுப்புவதற்காக 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி 400 சிலிண்டர்களில் வாயு வடிவிலான ஆக்சிஜன் நிரப்பப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும். இதற்காக தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, தேவையான மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுப்பபடும்.
மேலும் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகின் மூலமும் ஆக்சிஜன் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அரசு சாரா மருத்துவர்களுக்கும் ஆன்லைன் கலந்தாய்வு வேண்டும் - மருத்துவர் ரவீந்திரநாத்!