தூத்துக்குடியில் உள்ள ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. அதில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மற்றும் 23 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்த அவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் இரண்டு நாள் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
நாளை மே தினத்தையொட்டி காலை 7 மணி அளவில் ஸ்டாலின் தலைமையில் மே தின சிறப்பு பேரணி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஹவுஸிங் போர்டு காலனி, மாப்பிள்ளையூரணி, தாளமுத்து நகர் உள்ளிட்ட இடங்களில் திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையாவை ஆதரித்து ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையிலான தேர்தல் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.