தூத்துக்குடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி, விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் பொன்பாரத் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த டிராக்டரில் மணல் கடத்தியது கண்டறியப்பட்டது.
உடனடியாக, டிராக்டர் ஓட்டுநரான கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணனை (57) கைது செய்து விசாரணை மேற்காண்டனர். விசாரணயில், டிராக்டர் உரிமையாளரான வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்த முத்தழகு(59) என்பவர் மணல் திருடச் சொன்னது தெரியவந்தது.
மேலும், டிராக்டருக்கு பாதுகாப்பாக காரில் வந்த முத்தழகு, கார் ஓட்டுநரான திரவியபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன்(38) ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர், போலீசாரைத் தாக்கி தகாத வார்த்தைகளால் பேசி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், சூரங்குடி காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து முத்தழகு, ஹரிகிருஷ்ணன், முனீஸ்வரன் ஆகிய 3 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் பரபரப்பு; போலி நாகமாணிக்க கும்பல் கைது