தூத்துக்குடி: நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு முன்னாள் ஒன்றிய இணை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஸ்டாலினுக்குப் பாராட்டு
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 'சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதைக் கேட்டேன். அதில், கடந்த 100 நாள்களில் தனது ஆட்சியைப் பார்த்திருப்பீர்கள். அதில் 101ஆவது நாளில் இருக்கிறேன். அடுத்த 100 நாள்களில், கடந்த 100 நாள்களை விட சிறப்பாக செயல்படுவேன் எனக் கூறியிருந்தார்.
இதில் விமர்சனத்திற்கு இடமில்லை. இன்றைய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எதைச் சொல்லவேண்டுமோ அதைக் கூறியுள்ளார்.
நாட்டுக்காக உழைப்பதில் திருப்தி கூடாது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் 100 நாள்களை விட அதிகப் படியான பணிகளை செய்ய இருக்கிறோம் எனக் கூறியுள்ளார். இதற்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர். பட்ஜெட்டுக்குப்பின் விவசாயிகளுக்காக தனி பட்ஜெட்டை தமிழ்நாட்டில் முதன்முதலாக வெளியிட்டுள்ளனர். அதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
சாதி சாமியிடம் இல்லை
தொடர்ந்து பேசிய அவர், 'எந்த தெய்வமும் சாதி பார்ப்பது கிடையாது. மக்கள் தான் பார்க்கின்றனர். சாதி சாமி இடம் இல்லை. பக்தரிடம் இல்லை. சிலரிடம் மட்டுமே உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ் நமது ஜீவன். உயிர்த் தமிழ் வளர்ந்தால் தமிழன் வளர்வான்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு எம்.பி.,க்கள் இங்கு மட்டும்தான் புலி - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு!