தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் உள்ளது தெப்பக்குளம் மாரியம்மன் கோயில். தூத்துக்குடி சிவன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட இந்த தெப்பக்குளத்தில் விசேஷ காலங்களில் தெப்ப தேரோட்டம் நடப்பது வழக்கம்.
மாரியம்மன் கோயிலின் முகப்பிலேயே தெப்பக்குளம் அமைந்துள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சாமி தரிசனத்திற்கு பிறகு சிறிது நேர இளைப்பாறுதலுக்காக தெப்பக்குளத்தில் அமர்ந்து அதில் உள்ள மீன்களுக்கு இரை இடுவது வழக்கம்.
கரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதிலிருந்து கோயிலுக்கு பக்தர்கள் வர தொடங்கினர். இதனையடுத்து தெப்பக்குளத்தில் மீன்களுக்கும் பக்தர்கள் இரை இட்டு மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் தெப்பக்களத்தில் உள்ள மீன்கள் இன்று திடீரென இறந்து நீரில் மிதந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. கோயில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் அனைத்தும் திடீரென நீரில் செத்து மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததற்கு சதி வேலை காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.