தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட டீசல் (பயோ டீசல்) விற்பனை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மீனவர்கள் கடலுக்குச்செல்ல படகுகளுக்கு இந்த வகை கலப்பட டீசலை சிலர் உபயோகப்படுத்துகின்றனர். இது சந்தையில் விற்பனை செய்யப்படும் டீசலை விட விலைகுறைவாக கிடைப்பதால் இதனை அவர்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
இதனைத்தடுக்க காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர். சமீப காலங்களாக தூத்துக்குடியில் இந்த பயோ டீசல் அதிக அளவில் விற்கப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் துணைகாவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் 3 தனிப்படைகள் அமைத்து, பயோ டீசல் விற்பனை செய்பவர்களை கண்காணித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று சிப்காட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் பயோ டீசல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அருண் என்பவருக்குச்சொந்தமான அந்த குடோனை போலீசார் சோதனை செய்தனர்.
அங்கு கலப்படம் செய்து கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரி, டீசலை அங்கிருந்து எடுத்துச்செல்ல பயன்படுத்திய சிறிய லோடு வேன், அதனுடன் டீசல் பேரல்கள் மற்றும் சின்டெக்ஸ் டேங்குளும் இருப்பதைக் கண்டறிந்தனர். அத்துடன் அங்கு இருந்த ராஜகோபால், புஷ்பராஜ், ராமசாமி, பிரவீன், பவுல் அந்தோணி மற்றும் டேனி ஆகியோரைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர்.
மேலும், அங்கிருந்த 40 ஆயிரம் லிட்டர் பயோ டீசல், கடத்தலுக்குப் பயன்படுத்திய டேங்கர் லாரி, உட்பட சுமார் 80 லட்சம் ரூபாய் அளவிலான பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அப்போது ஏ.எஸ்.பி சந்தீஷ், டேனி என்பவரிடம் விசாரணை செய்து கொண்டிருந்தார். டேனி டீசலுக்கான பில்லை காட்டுவதாகக்கூறியபடி அங்கிருந்து நழுவி தப்பியோட முயன்றார். இதனைக்கண்ட தனிப்படை போலீசார் தப்பியோடிய டேனியை காட்டுக்குள் துரத்திச்சென்று பிடித்து வந்தனர். மேலும், மற்றொரு குற்றவாளியான வேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் போலீஸ் விசாரணையில் தப்பியோடிய போலீசாரால் விரட்டி பிடிக்கப்பட்ட டேனி, தூத்துக்குடி மாநகர மீனவர் அணி அமைப்பாளரும், தூத்துக்குடி மாநகராட்சி 24ஆவது வார்டு பெண் திமுக கவுன்சிலர் மெட்டில்டா என்பரின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது’ - ஜெயக்குமார் விமர்சனம்