அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் வழங்குதல் மற்றும் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இருசக்கர வாகனங்களையும், சாதனை மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “ கரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் அரசு பணியில் இணைக்கப்பட்டவர்கள் யாரும் பணியில் கட்டாயப்படுத்தப்படவில்லை. அவர்களின் பணி நியமனமே தற்காலிகமானதுதான். தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து தற்காலிக பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் கரோனா முன்கள பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் நிலையை அடைய வாய்ப்பில்லை ” என்றார்.
இதையும் படிங்க: கழிப்பறையை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு - வடிவேலு பாணி போஸ்டரால் பரபரப்பு