தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் பரப்புரைக்காக கோவில்பட்டி நகரப் பகுதியான நடராஜபுரம், காந்தி நகரில் வேலாயுதபுரம், முகமது சாலியாபுரம், புதுகிராமம் உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் பேசுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது மத்திய அரசின் பணி என விடாமல் அமைச்சராக இருந்த நான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தீப்பெட்டி உரிமையாளர்களைச் சந்திக்க வைத்து 18 விழுக்காடாக இருந்த ஜிஎஸ்டி வரியை 12 விழுக்காடாக குறைக்க நடவடிக்கை எடுத்தேன்.
எதிர்த்துப் போட்டியிடுவோர் சும்மா படம் மட்டுமே காட்டுவார்கள், வெல்லப்போவது இரட்டை இலைதான். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறப்போவது கோவில்பட்டி தொகுதிதான். அதற்காகத்தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நான் எனது கடமையைச் செய்துவிட்டேன். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். எம்ஜிஆர் திரைப்படத்தில் வரும் சண்டைக் காட்சிகளில் கூட டூப் போட்டு நடிக்காதவர். அந்த இயக்கம் அண்ணா திமுக. வரலாற்றில் இங்கு டூப்பிற்கு வேலை இல்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் - உச்ச நீதிமன்றம் கேள்வி