தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும்போது உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் நேற்று (ஜூன் 25) அவர்களது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, இருவரின் உடலுக்கும் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சண்முகநாதன் எம்.எல்.ஏ. உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சமுதாய அமைப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில், கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறும்போது, "உடற்கூறு ஆய்வு முடிவதற்கு முன்பே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வியாபாரிகள் இருவரும் நோயின் காரணமாகத்தான் இறந்தார்கள் என அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலமைச்சரின் இந்த அறிக்கை வழக்கு விசாரணையைத் திசை திருப்பி விடக்கூடாது. இதுபோல் கைதி மரணங்கள் இனிமேல் தமிழ்நாட்டில் எப்போதும் நடைபெறக் கூடாது.
நீதிமன்றம் விசாரணை அறிக்கை கேட்டுள்ளது. நீதிமன்றங்களை நம்புகிறோம். நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நியாயம் கிடைக்கும் வரை திமுக உங்களோடு இணைந்து போராடும்" எனக்கூறினார்.