தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக விளாத்திகுளம், எட்டயாபுரம், சூரங்குடி, குளத்தூர், எப்போதும் வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை, தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போனதாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தனர்.
இந்தத் தொடர் புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆடுகளை திருடியவர்களை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
தனிப்படையினர் ஆடுகள் திருடுபோன பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வேம்பார் சோதனைச்சாவடியில் இன்று (நவ.18) அதிகாலை காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சிவகங்கை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55), காரைக்குடி கண்டனூர் ரோடு பகுதியைச் சேர்ந்த (52) எனத் தெரியவந்தது.
மட்டன் கடையில் விற்பனை செய்ய ஆடுகள் திருட்டு
இதையடுத்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த 14 ஆடுகள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று கார்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், காரைக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் முகம்மது நாசர் என்பவரின் மகன்களான முகம்மது அராபத், ஆசிக் ஆகிய இருவரும் மட்டன் கடை நடத்தி வருகின்றனர்.
இந்த மட்டன் கடைக்கு ஆடுகளை திருடிகொண்டு வந்து கொடுப்பதற்காக முகம்மது அராபத்தின் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் பாண்டிச்செல்வம், பாலமுருகன், நவநீதகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் செயல்பட்டுள்ளனர். அதேபோன்று ஆசிக் உள்ளிட்ட அவரது கூட்டாளிகளான செல்வராஜ், ஆறுமுகம், ஆசிக்ராஜா ஆகிய நான்கு பேர் என மொத்தம் 8 பேரும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடுகளை திருடி வந்துள்ளது தெரியவந்தது.
குற்றவாளிகளுக்கு வலை
இந்தக் கும்பல் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 20 இடங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 101 ஆடுகளை திருடியதும் தெரியவந்துள்ளது. மேற்படி மற்ற நபர்களில் முகம்மது அராபத், பாண்டிச்செல்வம், பாலமுருகன் ஆகிய 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி காவல் நிலைய கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து தற்போது சிறையில் உள்ளனர்.
மற்ற நபர்களை தனிப்ப்டை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆடுகள் திருடிய நபர்களை கைது செய்து திருடு போன ஆடுகளை மீட்ட விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
இவர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து காரில் சென்று, ஆடுகளை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் ஆடுகள் திருடிய உடன் ஆடுகள் கத்தமால் இருக்கும் வகையில் பிளாஸ்டிக் டேப்பினை கொண்டு ஆடுகளின் வாயில் ஓட்டி வந்துள்ளனர்.
ஆடுகளை திருடி இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், மூன்றாவது கண்னில் (சிசிடிவி) சிக்கிய திருடர்களை தற்போது காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ’கூகுள் பே’ மூலம் கொள்ளை: 3 பேர் கைது!