தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா இன்று பார்வையிட்டு அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். நிலக்கரி இறக்குமதி தளம், வடக்கு சரக்கு தளம், மார்ஷலிங் யார்டில் இருந்து துறைமுக பரிமாற்ற முனையத்திற்கு இடையே ரயில் பாதை அமைக்கும் பணி உட்பட 139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இன்று அவர் தொடங்கி வைத்தார். பின்னர் துறைமுக அலுவலர்களுடன் துறை வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், இலங்கை நாட்டிற்கு கொண்டுச் செல்லப்படும் சரக்கு பெட்டகங்கள், தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக நேரடியாக கொண்டுச் செல்லும் வகையில் துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் வருவதற்காக பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் முடிவடையும்.
தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக 900 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அமையும். நாட்டிலுள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த சாகர்மாலா திட்டத்தின் கீழ் 123 திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார்