தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சல் துறை சார்பில், தேசியக்கொடியுடன் ஆயிரத்து 500 மாணவிகள் 75 எண் வடிவத்தில் அமர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அரசு மகளிர் பள்ளி தலைமையாசிரியை ருத்திர ரத்தினகுமாரி தலைமை தாங்கினார். இந்திய அஞ்சல் துறையின் உதவி கோட்ட கண்காணிப்பாளர் வசந்தி தேவி முன்னிலை வகித்தார். தலைமை அஞ்சல் அலுவலர் ரெஜினா, அஞ்சல் வணிக வளர்ச்சி அலுவலர் சங்கரேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
எனது பார்வையில் இந்தியா இரண்டு 47, போற்றப்படாத இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள், வீரர்கள் என்ற தலைப்பில் மாணவியர் பிரதமருக்குக் கடிதங்கள் எழுதினர்.
முன்னதாக நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் தேசியக் கொடியுடன் ஆயிரத்து 500 மாணவிகள், 75 எண் வடிவத்தில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
அஞ்சல் துறை அலுவலர்கள் 75ஆவது சுதந்திர தினச் சிறப்பு, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சி நிறைவில் ஆயிரத்து 500 மாணவிகள் பிரதமருக்கு எழுதிய தங்களது அஞ்சல் அட்டைகளை தலைமை அஞ்சல் அலுவலர் ரெஜினாவிடம் ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அமல புஷ்பம் செய்திருந்தார்.
இதையும் படிங்க: 'மாநிலப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும்போது எழுந்து நிற்பது கட்டாயம் - அரசாணை