தூத்துக்குடி: கரோனா... சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு நம்மோடு வாழ்ந்து வந்தாலும், கடந்த ஆண்டு இறுதியில் பிரபலமாகி, பிரச்னையும் ஆனது. உலகத்தையே புரட்டிப் போட்ட வைரஸின் தாக்கம், ஆண்டின் மூன்றில் ஒரு பங்கு நாட்களை தின்று செறித்து, செல்லாகாசாக்கியுள்ளது.
பனிக்கால உறக்கம் முடிந்து மெல்ல சாேம்பல் முறிக்கும் விலங்குகள் போல, உலகம் ஊரடங்கு தளர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக செயல்படத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் தொடந்து கரோனா ஊரடங்குத் தளர்வுகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மக்கள் முழுவதுமாக பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனரா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.
வாழ்க்கைச் சக்கரம் மெல்ல சுழலத் தொடங்கும் முன், பழைய சவால்கள் நம்முன் நின்று சிரிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக முன்களப்பணியாளர்களின் பணிகள் இன்னும் சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. அதில் ஒன்று காவல் துறையினரின் வாகன சோதனைகளில் ஒரு அங்கமான, வாகனம் ஓட்டுபவர்களிடம் நடத்தும் மூச்சுப் பகுப்பாய்வு சோதனை (Breath analyser test) .
ஊரடங்கு காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்பட்டவர்களில் மதுப்பிரியர்களும் அடக்கம். அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய அரசு இயந்திரமும் வருமானத்தைக் காரணம் காட்டி, முதலில் திறந்தது மதுபானக் கடைகளைத் தான்.
சமூக இடைவெளியைக் கடைபிடிக்க மரக்கட்டைத் தடுப்புகள், கரோனா பரவலைத் தடுக்க வயதுவாரியாக மது விற்பனை, அதற்காக வண்ண வண்ண டோக்கன்கள் என அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தன. இத்தனை யோசனைகளில் ஒன்றிரண்டாவது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்த பின்பற்றப்பட்டதா என்றால் பதில் மவுனம் தான். அதே நேரத்தில் வாகன ஓட்டிகளிடம் வழக்கமாக நடத்தும் மூச்சுப் பகுப்பாய்வு சோதனைகளும் கரோனா பரவல் காரணமாக இப்போது கிடையாது.
இதுகுறித்து வருத்தம் தெரிவிக்கும் தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கச் செயலாளரும், சமூக ஆர்வலருமான முத்து, "சமீபகாலமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. அதனால் ஏற்படும் விபத்துகளும் தூத்துக்குடி மாநகராட்சியில் அதிகரித்துள்ளன. மதுபோதையில் வாகனம் ஓட்டி ஏற்படும் சாலை விபத்துகளில் குறிப்பாக, 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மரணிக்கும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி வாகனம் ஓட்டுபவர்களை ஊக்குவிப்பது மாதிரியான செயல்களில் ஈடுபடுவதாகவே தெரிகிறது'' என்றவர், ''குடி குடியைக் கெடுக்கும் என சொல்வது பேச்சில் மட்டுமே உள்ளது. மது போதையினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க இன்னும் முன்மாதிரியான நடவடிக்கைகளை செய்ய, காவல் துறையினர் முன்வர வேண்டும்" என்றார்.
இவரது ஆதங்கம் கள நிலவரத்தைச் சொல்கிறது என்றால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்த காலத்தின் சமூக நடப்புகளைச் சொல்கிறது, வழக்கறிஞரும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான சட்ட ஆலோசனை வழங்குபவருமான அதிசயகுமாரின் வார்த்தைகள்;
"கரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததனால் மதுவினால் ஏற்படும் குற்றங்கள் குறைந்திருந்தன. மதுவினால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்யும், பெண்கள் பாதுகாப்பு அமைப்பில் உள்ள அதிகாரிகளும் இது குறித்து தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
வழக்கமாக, மது தொடர்பான குற்றங்கள் குறித்து மாதத்திற்கு 20 வழக்குகளுக்கும் குறையாமல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். கரோனா காலத்தில் அது போன்று எந்த வழக்கும் பதிவு செய்யப்படாதது, குடும்ப ரீதியாக அமைதியை ஏற்படுத்தி இருந்தது.
மதுக் கடைகள் திறக்க அனுமதியளித்த மறுநாளே தூத்துக்குடி மாநகரில் கொலை சம்பவம் நிகழ்ந்தது. குற்றச் செயல்களுக்கு அடிப்படை குடிதான். டாஸ்மாக் கடையை மூடினாலே குற்றச் சம்பவங்களை வெகுவாக குறைக்கலாம்.
கரோனா காலத்தில் குடிபோதையில் வண்டி ஓட்டி பிடிபட்டவர் என்ற ரீதியில் எந்த வழக்கும் பதிவானதாகத் தெரியவில்லை. இதுகுறித்து எந்த அழைப்பாணையும் இதுவரை நீதிமன்றத்தில் வழக்குக்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை" என்றார்.
சமூக ஆர்வலர்களின் ஆதங்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், களமாடுபவர்களின் சிரமங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதாகவே இருக்கிறது. வாகன சோதனைகளில், மூச்சுப்பகுப்பாய்வு சோதனை செய்யப்படுகிறதா என, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உயர் அலுவலரிடம் கேட்கையில், 'கரோனா நோய்த்தொற்று காற்றின் மூலம் பரவக் கூடியது என்பதால் காவல் துறையினர் மேற்கொள்ளும் வாகன சோதனைகளில், மூச்சுப் பகுப்பாய்வு மூலம் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மட்டும் ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய அவர் மது போதையில் தான் இருந்தார் என்பதை உறுதிப்படுத்த மருத்துவச் சான்றிதழும் தேவைப்படும். மூச்சுக்காற்றில் ஆல்கஹாலின் அளவைக் கண்டறியும் பணி முதற்கொண்டு மருத்துவ பரிசோதனைச் சான்றிதழ் பெறும் வரையில், காவலர் மற்றவருடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழல் உருவாகும். எனவே மூச்சுப் பகுப்பாய்வு சோதனை குறித்து தற்பொழுது எதுவும் முடிவு செய்யப்படவில்லை’ என்றார்.
சட்டங்கள் திட்டங்கள் எல்லாம் இருந்தாலும் மதுப்பிரியர்களும் கொஞ்சம் சுயக்கட்டுப்பாடுடன் நடக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது...!
இதையும் படிங்க: மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் முன்னாள் ராணுவ வீரர்: நிகழ்கால ஷாஜகான் மாடசாமி!