தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஒருநபர் ஆணையம் விசாரணைக்கு வழக்கறிஞர் ஹென்றி டிபேன் வந்திருந்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100 நாள் போராட்டத்தின் இறுதி நாளான 2018ஆம் ஆண்டு, மே 22ஆம் தேதி அன்று முற்றுகைப் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
'வாருங்கள் பறவைகளை ஆவணப்படுத்துவோம்' - மதுரை பறவை ஆர்வலர்களின் முயற்சி
அதன்பேரில் தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் ஒரு நபர் ஆணைய முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழுவினர் விசாரணை நடத்திவந்தனர்.
17 கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் 400-க்கும் மேற்பட்டோர் வந்து சாட்சியம் அளித்துள்ளனர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், அலுவலர்கள், மருத்துவர்கள், காவல் துறையினர் உள்பட பல தரப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
‘கிட்டு மீது நடவடிக்கை எடுத்தது ஏன்?’ - சுப. உதயகுமார் கேள்வி
இச்சூழலில், ஒரு நபர் ஆணையத்தின் 18ஆவது கட்ட விசாரணை, ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் முன்னிலையாகி விளக்கம் அளிப்பதற்காக பத்திரிகையாளர்கள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சாட்சியங்களாக கருதப்படும் வழக்கறிஞர் ஹென்றி டிபேன், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா பாபு, ஹரி ராகவன் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அதன்பேரில் ஒரு நபர் ஆணையம் முன்பு முன்னிலையாகி விளக்கம் அளிப்பதற்காக வழக்கறிஞர் ஹென்றி டிபேன் இன்று தூத்துக்குடி வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
தமிழர்கள் சோமாலியர்கள் ஆகிவிடுவார்கள் - முகிலன் எச்சரிக்கை!
அப்போது, “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சாட்சியமாக எனது தரப்பு விளக்கம் அளிப்பதற்காக 125 பக்கங்களைக் கொண்ட ஆவண குறியீட்டை இன்று ஆணையம் முன்பு முன்னிலையாகி தாக்கல் செய்யவுள்ளேன்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணை முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை.
எனவே மீண்டும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடர வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவெடுத்துள்ளோம்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆணையம் மூலம் இழப்பீடு நிதி பெற்று தரப்பட்டுள்ளது. இந்த நிதி அவர்களைக் காயத்திலிருந்து ஆற்றுப்படுத்துவதற்கு மட்டும் சரியாக உள்ளது. எனவே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு கூடுதலான நிதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.
இதைப்போல துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலை அவர்களை அவமதிப்பது போல உள்ளது. ஆகவே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை மறுபரிசீலனை செய்து அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப உரியப் பணியை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்” என்றார்.