கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து கிருஷ்ணன் கோயில் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாக்குகள் சேகரித்தார். பின் பரப்புரையில் ஈடுபட்ட ஜி.கே. வாசன் பேசுகையில்,
"இங்கு மண்ணின் மைந்தன் போட்டியிடுகிறார். உங்களின் ஒருவராக உங்களின் தொகுதி வளர்ச்சித் திட்டப்பணிகளைக் கொடுக்கின்ற நிரந்தர எம்எல்ஏ தேவையா? பொழுதுபோக்காக இங்கு வந்துசெல்லக்கூடிய தற்காலிக எம்எல்ஏ தேவையா? என்று முடிவுசெய்கின்ற பொறுப்பு கோவில்பட்டி மக்களிடம்தான் இருக்கிறது.
கோவில்பட்டியில் அனைத்துத் துறைகளும் 100 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென்றால், அவருக்குத் தொடர்ந்து வெற்றி வாய்ப்பை அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கக் கூடியவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என உயர்ந்த நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். பெண்களின் சுமையைக் குறைக்க, அரசு ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே மகளிருக்காக அதிகத் திட்டங்களைக் கொண்டுவந்தது அதிமுக அரசுதான். இதை மகளிர் மறந்துவிடக் கூடாது. சட்டப்பேரவைக்குப் போகாத கட்சி திமுக, தேர்தல் வந்தவுடன் சட்டப்பேரவைக்குப் போக நினைக்கிறது.
மக்கள் மன்றத்திலும் சட்டப்பேரவையிலும் மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் வெளியில், ஆட்சியாளர்கள் மீது பொய்களைக் கூறி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் தக்க பாடம் கொடுக்க வேண்டும்" என்றார் அவர்.
இதையும் படிங்க: 'இலவசங்களை வழங்கி மக்களை முட்டாளாக வைத்துள்ளனர்' - விஜயபிரபாகரன் காட்டம்