தூத்துக்குடி: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையில் முக்கிய இடம் வகிப்பது இனிப்புகள் தான். இதன் காரணமாக பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விற்பனையை கருத்தில் கொண்டு பேக்கரி நிறுவனத்தினர் சுகாதாரமற்ற முறையில், பொதுமக்களுக்கு இனிப்புகளை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சோதனை நடத்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அலுவலர்கள் இன்று(நவ.01) தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது, தோற்றத்துக்காக அதிக அளவு நிறமூட்டிகளை சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 35 கிலோ இனிப்புகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், செய்தியாளர்களிடம் பேசும்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் இனிப்பு, காரம், வகைகளை வாங்குவார்கள். தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளின் மீது அவை தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும்.
மேலும் பலகாரங்களில் சேர்க்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் அவற்றின் அளவு ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். மேற்கண்ட தகவல்கள் இல்லாமல் வெறும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இனிப்பு கார வகைகளை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துவது உடல் நலத்திற்கு தீங்கானது.
எனவே இது தொடர்பாக பொதுமக்கள் தங்களிடம் எந்த நேரமும் புகார் (94440 42322) அளிக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கரோனா வைரஸை கொல்லும் இயந்திரம் - ஐஐடி பாட்னாவின் அரிய கண்டுபிடிப்பு!