தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் பகுதியில் கரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை விலக்கி நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று (ஜூலை8) நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராபர்ட் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, வட்டாட்சியர் செல்வகுமார், வடபாகம் காவல் ஆய்வாளர் அருள், அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் மீனவர்கள் சிலர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தூத்துக்குடியில் 120 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
எனவே தங்களையும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நல்ல முடிவு எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மீன்வளத்துறை அலுவலர்கள் கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: பிணையில் வெளிவந்த ரவுடி வெட்டிக் கொலை - போலீசார் விசாரணை!