தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற திருத்தலங்களில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலும் ஒன்று. இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக, தசரா திருவிழாவானது மிகச்சிறப்பாகத் தூத்துக்குடி மாவட்டம், குலசையில்தான் கொண்டாடப்பட்டுவருகின்றது.
இங்கு பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றக் கோரியும் நிறைவேறிய வேண்டுதல்களுக்காக 11 அடி வேல் குத்தியும், 21 தீச்சட்டிகளைச் சுமந்தும், திருநங்கைகள் பல்வேறு வகையான வேடங்கள் பூண்டு 41 நாட்கள் விரதமிருந்தும் குலசை முத்தாரம்மன் கோயிலுக்குச் செல்வது, காலங்காலமாகப் பக்தர்களால் பின்பற்றப்பட்டுவருகிறது.
இதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதியிலுள்ள தசரா குழுவினர், பாளை சாலையிலுள்ள வேம்படி இசக்கியம்மன் ஆலயத்திற்கு அவர்கள் வேண்டுதலின்படி, வேடங்களை அணிந்து வந்து அங்கிருந்து அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் அருள் ஆசிபெற்றுச் சென்றனர். இந்த மாபெரும் காளி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை ருத்திர தர்ம சேவா அமைப்பினர் செய்திருந்தனர்.