தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் கெளதமன் மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக் கலவரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மனிதப் படுகொலைகள் நடந்துள்ளது. அதன் துயரத்தை தாங்க முடியாமல்தான் சென்னையில் போராட்டங்களை நடத்தினோம்.
இந்த மண்ணில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அகற்றிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைத்திடவும், தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களது வேண்டுகோளினை ஏற்றுதான் இந்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
இந்த ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இயங்க அனுமதி அளித்தவர்களும், திறந்து வைத்தவர்களும், இந்த ஆலைக்கு எதிரான முற்றுகைப் போராட்டத்தில் மக்களை சுட்டுக்கொல்ல காரணமாக இருந்தவர்களும் தைரியமாக மக்களிடம் சென்று வாக்கு கேட்கிறார்கள்.
இந்த தொகுதியில் போட்டியிட்ட பிரதான கட்சிகள் அனைத்துமே ஒரு இடத்தில்கூட ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி ஏன் பேசவில்லை. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழுவில் கட்சிகள் சாராதவர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அனைத்தையும் தாண்டி, இந்த மண்ணின் மக்களின் பேராதரவு உள்ளது. நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என முடிவெடுத்தோம். ஆனால் தனிப்பட்ட முறையில் கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என சீமான் கேட்டுக் கொண்டதன் பேரில் இணைந்து செயலாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.