தூத்துக்குடி விமான நிலைய சமூகப் பங்களிப்பு நிதி உதவியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரக அலுவலக வளாகத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா இன்று (டிச.9) நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ மரக்கன்றுகளை நட்டுவைத்து திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஒரு லட்சம் மதிப்பிலான மின்மோட்டார் பொருத்திய இயங்கும் சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
அத்துடன், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற தூத்துக்குடி மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடி விமான நிலையத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் குறுங்காடு வளர்த்தல் எனும் நோக்கத்தோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரக அலுவலக வளாகத்தில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் இன்று நடப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களுக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி,சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் புயலால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கிட மத்தியக் குழு வந்தடைந்துள்ளது. சென்னை வந்த மத்திய குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மத்திய குழுவின் கணக்கீட்டின் அடிப்படையில் விரைவில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தான் 600 கோடி ரூபாய் பயிர் இழப்பீட்டு தொகை பெற்று தரப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சண்முகநாதன், சின்னப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் விஷ்ணுச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ரயில் மறியல்!