தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இங்கு முழுக்க முழுக்க நிலக்கரியை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களாக கடும் நிலக்கரித் தட்டுப்பாடு நிலவுவதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மொத்தம் உள்ள ஐந்து அலகுகளில் நான்கு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன்படி ஒரே ஒரு அலகுகளில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 25 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது.
நான்கு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 840 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு இடங்களில் மின் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையமான தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கப்பல் மூலம் நாளை(ஏப்ரல்.29) 50 ஆயிரம் டன் நிலக்கரி வர இருப்பதாகவும், எனவே விரைவில் நிறுத்தப்பட்ட நான்கு அலகுகளில் மின்சார உற்பத்தி நடைபெறும் என்றும் அனல்மின் நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: TN Weather Update: வளி மண்டல கீழடுக்குச்சுழற்சி: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை