தூத்துக்குடி: திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ''தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக ராஜராஜ சோழன் இந்துவா என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இது தேவையா? ராஜராஜ சோழன் ஒரு ஆலயத்தைக்கட்டி அதில் எல்லோரும் வழிபாடு நடத்தக்கூடிய ஆன்மிகத்தை உருவாக்கினார். அப்படியான ராஜராஜ சோழன் போன்று தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஆலயங்களையும் புனரமைப்பு செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் 400 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு நடக்கிறது.
தமிழ்நாட்டில் பெரியார் சிலை, எம்ஜிஆர் சிலை, அம்பேத்கர் சிலை ஆகிய சிலைகளை அவமானப்படுத்தி வருகிறார்கள். புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் செருப்பு மாலை அணிவித்தவர்கள் வழக்கில், சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பாஜகவினர்கள் கிறுக்கர்கள் என்று நான் சொல்லவில்லை. காவல் துறையினர் சொல்லியுள்ளனர். இதை நான் சொன்னால், இதை மட்டும் கட் பண்ணி எடிட் செய்து பாஜககாரர்களை கிறுக்கர்கள் என்று அழைத்தார் லியோனி என்று போட்டுவிடுவார்கள்.
இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என யாராக இருந்தாலும் தமிழர்கள் என்ற ஒரு குடைக்குள் கொண்டு வந்தது, திமுக. மூன்று மதங்களின் பாடல்களையும் பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி, மதத்தால் நம்மை பிரிக்க நினைக்கின்ற பாஜகவின் முகத்திரையை கிழிக்கும் இயக்கம், திமுக. இது தான் திராவிட மாடல் ஆட்சி.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. ஆனால், ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது சனாதானவாதிகளின் ஆட்சி.
நாளை (வருகின்ற 15ஆம் தேதி) திமுக இந்தி எதிர்ப்புப்போராட்டத்தை நடத்துகிறது. இந்தி படித்தால் உயர்ந்த பதவிகளைப் பெறலாம். இந்தி படித்தால் வேறு மாநிலத்தில் வேலைக்குச்செல்லலாம் என்று ஆசை காட்டுகின்றனர். இந்தி படிக்க வேண்டாம் என்று திமுக சொல்லவில்லை. இந்தியைப் படித்தாக வேண்டும் என்று திணிப்பதை தான் திமுக எதிர்க்கிறது” எனத்தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "தேசத்தந்தை மகாத்மா காந்தி'' சிலையின் மீது காவித்துண்டு இருந்ததால் பரபரப்பு!