தூத்துக்குடி அடுத்த எஸ்.ஏ.வி பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யபட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் லோடு ஆட்டோவுடன் நின்றிருந்தார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரது லோடு ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் 2 கிலோ 300 கிராம் எடையிலான கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, காவல் துறையினர் அவரைக் கைது செய்து விசாரனை மேற்கொண்டனர். அதில், விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா (24) என்பதும் அவர் தனது லோடு ஆட்டோவில் வைத்து கஞ்சாவை விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. பின்னர், காவல் துறையினர் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவையும், அதனை விற்பனை செய்ய பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க : திருடனை விரட்டியடித்த காவலாளி - சிசிடிவி வெளியீடு