தூத்துக்குடி: பழைய பேருந்து நிலையத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் நகரப் பேருந்து சேவையை மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
பேருந்து பயணத்தை தொடங்கி வைத்ததோடு, அதே பேருந்தில் கனிமொழி, கீதாஜீவன் ஆகிய இருவரும் ஒன்றாகப் பயணம் செய்தனர்.
பெண்களின் வாழ்க்கையை எளிமையாக்கிய அரசு
இதுதொடர்பாக கனிமொழி தனது ட்விட்டரில் பக்கத்தில், ”கட்டணமில்லா பேருந்து சேவையை பெருமளவிலான பெண்கள் பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டு பெண்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, “மக்களுக்கு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கண்டிப்பாக திறக்கப்படாது. கடந்த ஆட்சிக்காலத்தின் போது ஆக்சிஜன் தேவை ஏற்பட்டதால் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் ஆலை மட்டும் திறக்கப்பட்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டது. இதற்கு திமுக ஆதரவு அளித்தது.
இனி வேண்டாம் ஸ்டெர்லைட்
இதன் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு ஓரளவு ஆக்சிஜன் விநியோகம் கிடைத்தது . இருப்பினும் தமிழ்நாடு முழுக்க வழங்கக்கூடிய அளவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தி நடைபெறவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் ஆக்சிஜன் தேவை இல்லை என்பதால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதற்கு ஆங்காங்கே சிறிய சிறிய அளவில் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் வாங்கும் வாய்ப்பு வசதி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், முன்பு நடந்ததைபோல ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு மக்கள் துயரப்படும் மோசமான நிலை மீண்டும் வராது” என்று அவர் தெரிவித்தார்.