மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதனை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி ஆகிய இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
பெரிய மாட்டு வண்டி போட்டி 10 மைல் தூரம், சிறிய மாட்டு வண்டி போட்டி 6 மைல் தூரம் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை காண்பதற்காக சாலையின் இருபக்கங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே 30 ஆயிரம், 20 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. இதுபோல், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதலிடம் பிடித்தவருக்கு ரூ. 20 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்தவருக்கு ரூ. 15 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்தவருக்கு ரூ. 10 ஆயிரம், நான்காமிடம் பிடித்தவர்களுக்கு ரூ. 4 ஆயிரம் என்ற அடிப்படையில் பரிசுத் தொகை வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: மாசி மகத்தை முன்னிட்டு அரியலூரில் ஜல்லிக்கட்டு