தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கணக்கான நபர்கள் படுகாயமடைந்தனர். பலியானோர் குடும்பத்தினருக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
ஆனால் கல்வித் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பல முறை கல்வித்தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் வருகின்ற 22ஆம் தேதி தூத்துக்குடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சரை சந்திக்க வேண்டுமெனவும் அதுபோல பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.
மேலும் தங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் தூத்துக்குடி வரும் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திப்பதற்கான வாய்ப்பை தங்களுக்கு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
மேலும், முதலமைச்சரை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.