ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அதிமுக பாசறை தலைவர் ஜெயலலிதா இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு 28 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளோம். இதில் தலைமைக் கழகம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மோகனைத் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் மகிழ்ச்சியுடன் களப்பணியாற்றுவோம்.
தற்பொழுது தலைமை கழகத்திலிருந்து ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகன் சுயநலம் மிக்கவர். அவர் மட்டும் தான் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர். இதுமட்டுமில்லாமல் வேட்புமனு பரிசீலனையின் போது எனது பெயர் தான் வேட்பாளர் பட்டியலில் கடைசி வரையில் இடம் பெற்றிருந்தது. இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னர் நேர்முகத் தேர்வுக்காக என்னைத் தலைமை கழகத்தினர் அழைத்திருந்தனர். அதன்பேரில் இங்கிருந்து நான் சென்னை செல்லும் இடைப்பட்ட நேரத்தில் பணம் கொடுத்து தன்னை வேட்பாளராக பட்டியலில் இணைத்துக் கொண்டார் மோகன்.
வேட்பாளர் பட்டியல் பரிசீலனையில் இருந்த எனது பெயரை அவர்கள் நீக்கிவிட்டனர். ஆகவே என்னையே தலைமை கழகம் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்து உள்ளவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது எங்களது கருத்து.
தற்பொழுது அதிமுக கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோகன் மீது நிறைய வழக்குகள் உள்ளன. பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அபகரித்த வழக்கில் அவர் உள்ளார். எனவே அதிமுக தலைமை கழகம் ஓட்டபிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரான மோகனை மாற்றுவதற்குப் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்’ என்றார்.