கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தூத்துக்குடியில் இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் கூட மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நேரத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ள புனித மேரிஸ் காலணி, லூர்தம்மாள்புரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன், கூடுதல் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், உதவி ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ஜேசிபி எந்திரங்கள், மழை நீரை வெளியேற்றும் மோட்டார் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட இடங்களில் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதையடுத்து கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மழை பாதிப்பு குறித்து முன்னேற்பாடு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சரிவர மேற்கொள்ளாததால் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனியாவது மழைநீரை வெளியேற்றுவதற்குப் போர்க்கால அடிப்படையில் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறினார்.