தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி தந்தை, மகன் (ஜெயராஜ் - பென்னிக்கிஸ்) ஆகியோரை காவல் துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல் துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று (நவ.16) மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
செவிலியின் சாட்சி
பின்னர் இந்த வழக்கில் சாட்சியான சாத்தான்குளம் அரசு மருத்துவமனை செவிலிர் கிருபை திரேனப்பு நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார். அப்போது தந்தை, மகன் இருவரும் காவல் நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது இருவரின் உடலில் ரத்தகாயங்கள், ரத்த உரைதல் இருந்ததாக செவிலி சாட்சியளித்தார்.
இதையடுத்து சாட்சியத்திடம் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பத்மநாபன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி, உறவினரான தேசிங்ராஜா, ஜெயராஜின் நண்பர்கள் உள்ளிட்டோரிடமும் சாட்சியம் விசாரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: மாற்றான் தந்தை கொடுத்த பாலியல் தொல்லை - கண்கலங்க வைக்கும் சிறுமியின் ஆடியோ