தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கானோர் வருகை தருவர். கடந்தாண்டு கரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி எளிய முறையில் திருவிழா கொண்டாடப்பட்டது.
அதேபோல இந்தாண்டும் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற உள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று (ஜூலை) நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "கரோனா தொற்று காரணமாக இந்தாண்டும் பனிமய மாதா பேராலய திருவிழா பக்தர்களின்றி நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணி அளவில் பேராலய திருவிழா கொடியேற்றம் நடைபெறும்.
அதற்காகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்பட 400 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அதனால் கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது. அத்துடன் சப்பர பவனி, தேர் பவனி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொடியேற்ற நாளை தவிர மற்ற நாள்களில், அனுமதித்த அளவு பக்தர்கள் தரிசித்து செல்லலாம்" என்றார்.
இதையும் படிங்க: பனிமய மாதா ஆலய 439ஆவது ஆண்டு பெருவிழா: பக்தர்கள் இன்றி நடத்திட முடிவு!