தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேம்பாரிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஆயிரம் கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்த காவல் துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ரகசிய தகவல்
வேம்பார் கடல் பகுதியில் இருந்து கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த இருப்பதாக கடலோர காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் சைரஸ், துணை ஆய்வாளர் தாமரைச்செல்வி, காவலர்கள் பரமசிவம், பக்ருதீன், கார்த்திக், ஜெயசிங், சுப்பையா உள்ளிட்டோர் வேம்பார் கடல் பகுதியில் இன்று (டிச.16) அதிகாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1000 கிலோ கடல் அட்டை
இந்நிலையில் வேம்பார் தோமையார் தேவாலயம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சூரங்குடி காவல் நிலைய துணை ஆய்வாளர் குருசாமி காவலர்கள் பால்பாண்டி, ராஜபாண்டியன், காத்தனன் ஆகியோர் சந்தேகப்படும்படியாக அவ்வழியாக வந்த கார் மற்றும் டெம்போ வேன்களை தடுத்து நிறுத்தினர்.
காவல் துறையினரை கண்டதும் கார் மற்றும் வேன்களில் வந்த நபர்கள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற காவல் துறையினர், ராமநாதபுரம், நரிப்பையூரை சேர்ந்த ஆவுல்மைதீன்(42) என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். காவல் துறையினர் டெம்போ வேனை சோதனை செய்ததில், 48 சாக்கு மூட்டைகளில் இருந்து 1000 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம். இந்த கடத்தல் தொடர்பாக, சூரங்குடி காவல் உதவி ஆய்வாளர் குருசாமி வழக்குப்பதிவு செய்து நரிப்பையூரைச் சேர்ந்த ஆவுல்மைதீனை கைது செய்து கார் மற்றும் டெம்போ வேனை பறிமுதல் செய்தார். தொடர்ந்து தப்பி ஓடிய தூத்துக்குடியைச் சேர்ந்த வேலு, முருகன், அமீர், அசார், வேம்பாரைச் சேர்ந்த ராஜா ஆகிய 5 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரும்பு கம்பிக்குள் கால் சிக்கி தவித்த முதியவர்: ஜேசிபியைக் கொண்டு மீட்பு!