இது தொடர்பாக நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவிடம் பெண் காவல் ஆய்வாளர் அளித்துள்ள புகாரில், ”எனது கணவரை டிசம்பர் 17 ஆம் தேதி முதல் காணவில்லை. நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்த போது எனது கணவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் ’கன் மேன்’ ஆக பணிபுரிந்து வந்தார். திடீரென நாங்கள் இருவரும் வேறுவேறு காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டோம்.
பின்னர் தலைமை பொறுப்பில் இருந்த காவல் உயர் அதிகாரி என்னிடம் வந்து, அவரது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். அதற்கு மறுத்த என்னை வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்தார். இச்சூழலில் நெல்லை மாவட்டத்திற்கு மாறுதலாகி வந்த அந்த உயர் அதிகாரியை, கூடங்குளம் காவல் நிலையத்தில் பணி புரிந்த எனக்கு பணி நிமித்தமாக அடிக்கடி சந்திக்க நேரிட்டது. அப்போது, மீண்டும் முன்பு போலவே வரம்பு மீறி அவர் நடந்து கொண்டார். அதற்கும் நான் மறுப்பு தெரிவித்ததால், தொடர்ந்து என்னை பழி வாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறார்.
அதோடு, என் மீது தவறான அறிக்கைகளை தயார் செய்து குற்றஞ்சாட்டினார். அதனால், கூடங்குளத்தில் இருந்து திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளேன். இந்த சதிச் செயல் தெரியாமல் எனது கணவர் என்னை தவறாக நினைத்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். எனக்கும் எனது குழந்தைகளுக்கும் ஏதாவது நடந்தால், எங்கள் சாவுக்கு முழுக்க முழுக்க காவல் உயர் அதிகாரிதான் காரணம். எனவே எனது கணவரை தேடி கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைப்பதுடன், பழிவாங்கல் நடவடிக்கையால் நான் இழந்த பணப்பலன்களையும் வாங்கித்தர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மாவட்ட அளவில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி மீது பாலியல் புகார் அளித்திருப்பது, தென்மண்டல காவல்துறையில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவிடம் கேட்டபோது, பெண் ஆய்வாளர் அளித்த புகார் குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 49.9 விழுக்காடு இடஒதுக்கீட்டை பின்பற்றும்படி மறைமுகமாக நிர்பந்திக்கிறதா மத்திய அரசு? நீதிபதிகள் கேள்வி