திருநெல்வேலி: நெல்லை சாஃப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இடைவேளையில் மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் விஸ்வரஞ்சன், சுதீஸ் மற்றும் அன்பழகன் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர்சித்திக் மற்றும் அப்துல்லா உள்ளிட்ட 5 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, திருநெல்வேலி வருவாய் ஆய்வாளர் மாரி துரை கொடுத்த புகாரின் பேரில் பள்ளியின் தாளாளர் செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி, தலைமை ஆசிரியை ஞான செல்வி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஞான செல்வி நெஞ்சுவலி காரணமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து தாளாளர் செல்வகுமார், கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய 2 பேரையும் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 5 மாஜிஸ்திரேட் ஜெய்கணேஷ் இல்லத்தில் இன்று காலை நெல்லை சந்திப்பு காவலர்கள் ஆஜர்படுத்தினர். இருவரையும் வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறைக்கு அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
பள்ளிக்கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து சாஃப்டர் பள்ளி இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை பத்து நாட்கள் மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை பள்ளி விபரீதம்: 100 பள்ளிகளில், 200 கட்டடங்கள் இடிக்க உத்தரவு