தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருமதி சத்யா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகள் பெற்றவர். இவரது கணவர் செல்வகுமார் தமிழக அரசு துறையில் பணிபுரிந்து (வட்டாட்சியர்) வருகிறார். தேர்தல் களம் குறித்து வேட்பாளர் சத்யாவிடம் ஈடிவி பாரத் சார்பில் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது.
சத்யா அளித்த நேர்காணலின் தொகுப்பு பின்வருமாறு:
திருநெல்வேலியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை எனக் கூறும் சத்யா, 50 ஆண்டுகால திராவிட ஆட்சியே பிரச்னைதான் என்கிறார். இதுகுறித்து அவர், மக்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பள்ளிக்கூட வசதி, சாலை, ரேஷன் வசதிகள் சரிவர இல்லை, திராவிட கட்சிகள் மக்கள் பிரச்னை எதையும் தீர்த்து வைக்கவில்லை. நான் வெற்றி பெற்றால் இதையெல்லாம் மாற்றி அமைப்பேன். 365 நாட்களும் சுழற்சி முறையில் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பேன். எந்த லஞ்சமும் பெறாமல் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்.
குடும்ப பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், ஆயிரத்து 500 ரூபாய் தருகிறோம் என திராவிடக் கட்சிகள் போட்டி போட்டு அறிவிக்கின்றன. ஆனால், நான் செல்லும் இடங்களில் எல்லா பெண்களும் என்னிடம் பணமெல்லாம் வேண்டாம், முதலில் சாராயக் கடையை மூடுங்கள் என்கிறார்கள். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை உடனடியாக மூடிவிடுவோம்.
மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், அதிலும் குறிப்பாக பெண்கள். திராவிட கட்சிகளில் பொதுவாக பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறைவு ஆனால் நாம் தமிழர் கட்சியில் சீமான் அந்த போக்கை மாற்றியுள்ளார். திராவிட கட்சிகளின் செயல்பாட்டால் ஓட்டே போடக்கூடாது என்ற மனநிலையில்தான் இருந்தேன். பிறகு சீமான் பேச்சால் ஈர்க்கப்பட்டேன். நல்லவர்கள் வராதவரை அந்த இடத்தை கயவர்கள் நிரப்பிக் கொண்டே இருப்பார்கள் என்று சீமான் எப்போதுமே கூறுவார். எனவே நமக்கும் அரசியலில் ஒரு கடமை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அரசியல் என்பது ஒரு சேவை, இந்த சேவையை நான் நிச்சயம் செய்வேன் என சத்யா கூறுகிறார்.