திருநெல்வேலி: களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில், காலை முதல் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
மேற்கண்ட நான்கு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 567 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 4516 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் 2,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவு பெற்றது. தொடர்ந்து முகவர்கள் முன்னிலையில் வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.
மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட மொத்தம் 2069 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 9 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு 3 அடுக்கு காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 69.34 விழுக்காடு பேர் வாக்களித்திருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் வாக்குப்பதிவு
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில், வள்ளியூர் ஒன்றியம் காவல்கிணறு ஊராட்சிக்குள்பட்ட பெரியநாயகிபுரம் வாக்குச் சாவடியில், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு தனது வாக்கை பதிவுச்செய்தார்.