திருநெல்வேலி: தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில் கடந்தாண்டு, அரசு நடைமுறைக்கு கொண்டுவந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற 11 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.
குறிப்பாக, மாநகராட்சி கல்லணை பள்ளியில் பயின்ற ஏழு மாணவிகளுக்கும், நடுக்கல்லூர் அரசுப் பள்ளியில் பயின்ற இரண்டு மாணவி, ஒரு மாணவருக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், நடுக்கல்லூர் அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்துள்ள மாணவிகள் திவ்யா, விஷ்ணு பிரியா, மாணவர் உதய செல்வன் ஆகிய மூன்று பேரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்திக்க ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.
மாணவர்கள் மூன்று பேரும் கோடகநல்லூரில் உள்ள இலவச நீட் பயிற்சி மையத்தில் மூன்று மாதம் பயின்றதாகவும், அதன்மூலம் எளிதில் தேர்வில் வெற்றிபெற்றதாகவும் தெரிவித்தனர்.
எனவே, சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்தின் நிர்வாகிகள், பெற்றோர்களும் மாணவர்களுடன் வந்திருந்தனர். விவசாயம், கூலி வேலைசெய்யும் குடும்பத்திலிருந்த வந்திருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் நீட் தேர்வில் வெற்றிபெறலாம் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும், யோக் பயிற்சி மையத்தின் உதவியால் தேர்வில் வெற்றிபெற்றதாகவும், தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலமே தங்களின் மருத்துவக் கனவு நிறைவேறியதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிய திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு