திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மைத் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அலுவலர்கள் தெரிவிக்கும்போது, நெல்லை மாவட்டத்தின் இயல்பான மழையளவைவிட 80.5 விழுக்காடு அதிகம் பெய்துள்ளது. நடப்பு ஆண்டில் நெல், சிறுதானியங்கள், பயிர்வகைகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் என மொத்தமாக 62ஆயிரத்து 328 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
ரசாயன உரங்களுடன் தேவையில்லாத பொருள்களைச் சேர்த்து விவசாயிகளுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க குழு அமைத்து அந்த குழுவானது மாவட்டத்திலுள்ள 55 உரக்கடைகளை ஆய்வு மேற்கொண்டனர். இதில் விதிகளை மீறி விற்கப்பட்ட ஒன்பது கடைகளுக்கு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
பனை மரத்தை அதிகரிக்க விதைகள் தர திட்டம்
பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இரண்டு லட்சம் பனை விதைகள் விவசாயிகளுக்கு வழங்கிட ஒதுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அணுகவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்களுக்குள்ள குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
குறிப்பாக “பிசான சாகுபடி நெல் நடவு செய்துள்ளோம். ஆனால், எங்களுக்குத் தேவையான உரம் முறையாக கிடைக்கவில்லை. உரம் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும்போது தங்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், தங்களால் முழுமையாக விவசாய பணியில் ஈடுபட முடியவில்லை” எனத் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த அலுவலர்கள், “உரம் தட்டுப்பாடு உடனடியாக சரி செய்யப்படும் இன்று 470 டன் உரம் வந்துள்ளது. இந்த உரம் அம்பாசமுத்திரம் குறுக்குத்துறை நடுவக்குறிச்சி உள்ளிட்டப் பல்வேறு பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நாளை (ஜன.01) முதல் அந்தந்த சங்கங்களில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை பெற்றுக்கொள்ளலாம்” என்றனர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், கூட்டத்திற்கு முன்பாக தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு 60ஆயிரம் ரூபாய் மானியத்தில் டிரில்லர் இயந்திரம், 6ஆயிரம் ரூபாய் மதிப்பில் குழி தட்டு நாற்று, 75ஆயிரம் ரூபாய் மதிப்பில் நடமாடும் காய்கறி வண்டிகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: Watch Video: 2 வயது குழந்தையை தெரு நாய் கடித்த கொடூரம் - தாயின் உருக்கமான பதிவு