திருநெல்வேலி: தற்போதைய நவநாகரீக காலத்தில் வீடு என்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது என்று கூறலாம். ஆண்டாண்டு காலத்திற்கு தங்கும் வீடு என்பதால் பல லட்சங்கள், கோடிகளை செலவு செய்து வசதிக்கேற்ப வீடுகளை வண்ணவண்ண அலங்காரத்திலும், புதுபுது வடிவத்திலும் கட்டமைத்து கொள்கிறார்கள். ஓட்டு வீடு மற்றும் மண் வீடுகள் பழமையானதாக இருந்தாலும் அவற்றால் பல நன்மைகள் ஏற்படுவது யாருக்கும் தெரிவதில்லை.
குறிப்பாக இந்த காலத்தில் எங்காவது ஓட்டு வீடு இருந்தால் அதை அதிசயமாகப் பார்க்கும் சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் கலைஞர் ஒருவர் இயற்கை சூழல் நிறைந்த வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதாவது முழுக்க முழுக்க செம்மண் கொண்டும் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி ஆகிய கலவை மூலமும் தனக்கான வீட்டை கட்டமைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தம்பதி ஆனந்த பெருமாள், கிரிஜா. கவின் கலைக் கூடம் என்ற பெயரில் தேங்காய் ஓடுகள் மற்றும் குப்பையில் போடும் பழைய பொருள்கள் மூலம் கலைப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பணியினை ஆனந்த பெருமாள் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இவர் தேங்காய் ஓடுகளை கொண்டு கீசெயின், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் என பல்வேறு பொருள்களை தயார் செய்து வருகிறார்.
அதேபோல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனது கலையை பயிற்சியாக கற்றுக்கொடுத்து வருகிறார். இவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் தீவிர ஆதரவாளர் ஆவார். ஆனந்த பெருமாளின் மனைவி கிரிஜா வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். தம்பதி இருவருமே இயற்கை சூழல் மீது அதிக ஆர்வம் உடையவர்கள். எனவே சூழலுக்கு ஏற்ப தங்கள் வாழ்வியலை கட்டமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் பாரம்பரிய வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தனர்.
தனது கணவனின் இயற்கை சூழல் மீதும் இயற்கை வாழ்வியல் மீதும் அபரீத ஆசை கொண்ட கிரிஜா தான் பார்த்து வந்த வங்கி மேலாளர் வேலையை உதறித்தள்ளி விட்டு தனது கணவருடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார். கொண்டாநகரம் கிராமத்தில் சுமார் 10 சென்ட் நிலத்தில் பாரம்பரிய வீடு கட்டும் பணியினை கடந்த ஆண்டு தம்பதி தொடங்கினர்.
வழக்கமாக தற்போதைய நாகரீக காலத்தில் வீடு என்றாலே மணல். சிமெண்ட், செங்கல், கற்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கட்டமைக்கப்படும். ஆனால் முழுக்க முழுக்க பாரம்பரிய வீடு கட்ட விரும்பிய தம்பதி, 1980 காலகட்டத்துக்கு முன்பு கட்டப்பட்ட மண் வீட்டை கட்ட முடிவு செய்தனர். அதன்படி முழுக்க முழுக்க செம்மண் பயன்படுத்தி வீடு கட்டும் பணியைத் தொடங்கினர்.
இதேபோல் சிமெண்ட்க்கு பதில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி ஆகிய கலவையை பயன்படுத்தியுள்ளனர். வீட்டினுள் பழமையை நினைவு கூறும் வகையில் மரத்தால் ஆன படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். அதேபோல் நம் முன்னோர்கள் வீட்டுக்கு வீடு திண்ணை அமைப்பது வழக்கம். அந்த காலத்தில் அனைவர் வீட்டிலும் கட்டாயம் திண்ணை அமைக்கப்பட்டிருக்கும். அதில் ஓய்வு நேரத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் ஒன்றாக அமர்ந்து பொழுதுபோக்குவார்கள். அதுமட்டுமல்லாமல் வழிப்போக்கர்கள் ஓய்வு எடுப்பதற்கும் திண்ணை பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால் காலப்போக்கில் பக்கத்து வீட்டுக்காரர் கூட யாரென்றே தெரியாத வகையில் நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வரும் இப்போதைய தலைமுறையினர் யாரும் வீட்டில் திண்ணை அமைப்பதில்லை. ஆனால் தம்பதி தங்கள் பாரம்பரிய வீட்டில் திண்ணை அமைத்துள்ளனர். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த பழைமையான மின்சாதன பொருள்களை தம்பதி பயன்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக சுவிட்ச் போர்டு 1970 காலங்களில் பயன்பாட்டில் இருந்தது. பெங்களூர். கோவை என பல இடங்களுக்கு அலைந்து, இந்த சுவிட்சுகளை வாங்கியுள்ளனர். வீட்டில் சீலிங் பகுதியிலும் 80 விழுக்காடு சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி ஆகிய கலவைகளை கொண்டு பூசியுள்ளனர். கலை மீது அதிக ஆர்வம் கொண்ட தம்பதி உடைந்த டைல்ஸ் கற்களைக் கொண்டு ஆடு, மாடு உருவங்களை சுவற்றில் வடிவமைத்துள்ளனர்.
அவர்கள் வீடு கட்டி உள்ள பகுதி மேய்ச்சல் நிலம் என்பதால் அதை நினைவுகூறும் வகையில் ஆடு, மாடுகளை வடிவமைத்துள்ளதாக தம்பதி தெரிவித்தனர். மண் வீடு தொடர்பாக தம்பதி சேலம், தர்மபுரி, பாண்டிச்சேரி என இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன் அடிப்படையிலேயே தங்களுக்கான வீட்டை தம்பதி கட்டமைத்துள்ளனர். குறிப்பாக இந்த வீடு கட்டுவதற்கு வெளிமாவட்டங்களில் இருந்து ஆள்களை வரவழைக்காமல், உள்ளூரை சேர்ந்த கட்டட கலைஞர்களை பயன்படுத்தியுள்ளனர். தற்போதைய மாடல் வீடுகளை கட்டமைத்து வரும் கலைஞர்களுக்கு இது போன்ற மண் வீடு கட்டுவது என்பது சவாலாக இருந்துள்ளது.
இருப்பினும் தம்பதி இருவரும் கூடவே இருந்து தாங்கள் ஆய்வில் கற்றுக்கொண்ட விஷயத்தை எடுத்துரைத்து கட்டடக் கலைஞர்களுக்கு உறுதியாக இருந்துள்ளனர். இது குறித்து ஆனந்த பெருமாள் கூறுகையில், "சூழல் வீடு அமைக்க வேண்டும் என்பது எனது கனவு. நம்மாழ்வாருடன் இருந்தபோது இயற்கை சூழல் குறித்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
இது எனக்கான வீடு மட்டுமல்ல என்னைப் போன்ற கலைஞர்கள், வழிப்போக்கர்கள் அனைவருக்குமான வீடு. தற்போதைய நாகரீக வீடு கட்டுவதற்கும் மண் வீடு கட்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பாரம்பரிய வீடு கட்டுவதற்கு அதிக நேரம் செலவாகும். எனவே அதன் மூலம் அதிக பணம் செலவு ஏற்படும். இந்த வீட்டில் முழுக்க முழுக்க செம்மண்ணை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம்.
சுவற்றில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி ஆகிய கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனது மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த வீடு கட்டி வருகிறோம். இதிலுள்ள ஒவ்வொரு பணியிலும் எனது மனைவியின் பங்களிப்பு உள்ளது. அவரின் ஆர்வத்தாலையே இந்த வீடு உருவாகியுள்ளது" என்று தெரிவித்தார்.
இது குறித்து வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுவரும் கட்டட மேஸ்திரி பாலு கூறுகையில், "வழக்கமாக சிமெண்டு கொண்டு தான் வீடு கட்டுவோம். ஆனால் இது புது அனுபவமாக இருந்தது. இந்த வீட்டில் செம்மண், சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவ, மாணவிகளுக்கு சிப்பாய்களாக இருப்போம்' அன்பில் மகேஷ் பொய்யாமொழி