திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கரோனா, உருமாறிய ஒமைக்ரான் தொற்று ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் (ஜன.9) ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
முழு ஊரடங்கில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர இதர காரணங்களுக்காக வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்களை கண்காணிக்க காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏழு சோதனைச் சாவடிகள்
இதையொட்டி, மாநகர காவல் துறை சார்பில் மாநகர் முழுவதும் ஏழு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு துணை ஆணையர் ( கிழக்கு) சுரேஷ்குமார் தலைமையில் 350 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும், மாநகர காவல் துறை சார்பில் 18 இருசக்கர ரோந்து வாகனங்கள் எட்டு நான்கு சக்கர ரோந்து வாகனங்களும் மாநகர எல்லை முழுவதும் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ஏழு சோதனை சாவடிகளில் காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 510 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகனங்கள் பறிமுதல்
மேலும், 64 இருசக்கர ரோந்து வாகனங்களும், 21 நான்கு சக்கர ரோந்து வாகனங்களிலும் மாவட்ட காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் மாவட்டம் முழுவதும் 860 காவலர்கள் இன்று முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, மாநகரில் வண்ணாரப்பேட்டை, கேடிசி நகர், நெல்லை சந்திப்பு ஆகிய இடங்களில் காவல்துறையினர் பேரிகார்டர் அமைத்து தேவையில்லாமல் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர். உரிய காரணங்கள் இல்லாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் அவதி
அதேபோல் மருத்துவமனை, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கிடையில் முழு ஊரடங்கையொட்டி இன்று பேருந்துகள் இயங்காததால் நெல்லை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்வதில் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். பலர் அதிக பணம் செலவு செய்து ஆட்டோக்களிலும் பிற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டும் பணிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல் முழு ஊரடங்கால் சென்னை மற்றும் கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: ஊரடங்கு: வடசென்னையில் 86 இடங்களில் வாகன சோதனை!