திருநெல்வேலி: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரசர்களால் பிரம்மாண்டமாக கோட்டைகள் கட்டப்பட்டன. போர் காலங்களில் பாதுகாப்புக்காகவும், அரச அலுவல்களுக்கும் கோட்டைக்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த கோட்டைகள் காலப்போக்கில் பராமரிப்பின்றி அழிந்துவருகின்றன. பல அழிந்துவிட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டையும் அழிந்துவிட்ட நிலையில் அதன் 2 வாயில்கள் மட்டும் இன்றளவும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.
இக்கோட்டை கி.பி. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் பல்வேறு வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலியில் குறிப்பாக, 'பாளையங்கோட்டை' என்ற ஊருக்கு பெயர் வர முக்கிய காரணமே இந்த கோட்டை தான். பாண்டிய மன்னர்களுக்கு பிறகு, பாளையக்காரர்கள் இந்த கோட்டையை கைப்பற்றினர். இதனால் பாளையங்கோட்டை எனப் பெயர்பெற்றது.
இறுதியாக, தீர்த்தாரப்ப முதலியார் என்ற அரசரிடம் இருந்து ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயர்கள் தங்களின் ஆயுதக் கிடங்காகவும், சிறைச்சாலையாகவும், இக்கோட்டையை பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை, இந்த கோட்டையின் கிழக்கு வாசல் என்று கூறப்படும் தற்போதைய அரசு அருங்காட்சியகத்தில்தான் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்ப்படை தளபதியாக இருந்த ஊமைத்துரையை சிறை வைத்திருந்தபோது, ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனை தூக்கிலிட்டப் பிறகு, இங்கு சிறையிலிருந்த படியே அவர் மருது சகோதரர்களின் உதவியை நாடினார். அதன்படி அப்போது சன்னியாசிகள் வேடத்தில் கைதிகளுக்கு அம்மை நோய்க்கு வைத்தியம் பார்ப்பதுபோல் நுழைந்த சிலர், கோட்டையிலிருந்து ஊமைத்துரையை தப்பிக்க வைத்ததாக வரலாறு உண்டு.
ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டிருந்த அறை இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அவரது சிறை அனுபவம் குறித்து அரசு அருங்காட்சியகத்தில் எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல, கோட்டையின் மேற்கு வாசல் என்று அழைக்கப்பட்ட பாளையங்கோட்டை மேடை காவல்நிலையம், தற்போது அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த மேற்கு வாசலிலும் பிரம்மாண்டமான செங்குத்தாக இருபுறங்களிலும் படிக்கட்டுகளைக் கொண்ட சிறையொன்றும் உள்ளது. கற்களாலான சுற்றுச் சுவர்கள் இன்றும் அவற்றின் கம்பீரம் குறைய விடாமல் காக்கின்றன. இதன் உள்ளே உள்ள துளையொன்று வெளியிலிருந்து வரும் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஏதுவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை மேடை காவல்நிலையம் செயல்பட்ட நிலையில், பாதுகாப்பாக பராமரிக்கப்பட்ட மேற்கு கோட்டைவாசல் தற்போது, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி இருந்தனர். பாரம்பரிய மிக்க இந்த மேற்கு கோட்டைவாசலை சமூக விரோதிகளிடமிருந்து மீட்டு, முறையாக பராமரித்து வரலாற்று நினைவிடமாக மாற்ற வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பல தரப்பினரும் கோரிக்கை வைத்து இருந்தனர். இதன் பலனாக, திருநெல்வேலி மாநகராட்சி 'சீர்மிகு நகர் திட்டம்' மூலம் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் கடந்தாண்டு இப்பணியை தொடங்கினர்.
பழமை மாறாமல் புதுப்பிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த செப்.8 ஆம் தேதி மேடை காவல் நிலையம் என்று அழைக்கப்படும் மேற்கு கோட்டை வாசலை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கோட்டையின் நான்கு வாசல்களிலும் படை வீரர்களுக்கு கூடம் இருந்துள்ளதைப்போல் அவர்களின் தேவைக்காக நான்கு வாசலிலும் கிணறு அமைத்துள்ளனர். கிழக்கு வாசல் எனப்படும் அரசு அருங்காட்சியகத்தில் இன்றுவரை அக்கிணறு இருந்து வருகிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோட்டையில், வடக்கு வாசல் முற்றிலும் சிதிலமடைந்து விட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மேற்கு கோட்டைவாசல் அரசு அருங்காட்சியகம் இருந்து வரும் கிழக்கு வாசல் மட்டுமே முழு பராமரிப்புள்ளது. இந்த இரண்டு கோட்டை வாசலுக்கும் சுரங்கப்பாதை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து எழுத்தாளர் நாறும்பூநாதன் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் அளித்த பேட்டியில், 'பாளையங்கோட்டையில் ஒரு கோட்டை இருந்தது என்று பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்காது. ராபர்ட் கார்டுவெல் இந்த கோட்டை பற்றி தனது குறிப்பில் தெரிவித்துள்ளார். 1850 காலகட்டத்திலேயே இக்கோட்டையின் வடக்கு வாசல் முற்றிலும் சிதைந்துவிட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. பின் பாளையக்காரர்களிடமிருந்து, 1850 காலகட்டத்தில் இறுதியாக தீர்த்தாரப்ப முதலியார் இந்த கோட்டையை கைப்பற்றினார்.
பின்னர் அவரிடமிருந்து ஆங்கிலேயர்கள் கோட்டையை, இக்கோட்டைய கைப்பற்றினர். இக்கோட்டைக்குள் பழமையான சிவன் கோயில் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் அப்போதே அரசர்களால் கட்டப்பட்டது. இக்கோயில்கள் கி.பி. 995 ஆம் ஆண்டை சேர்ந்தவை என்று குறிப்புகள் உள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட போது, வெல்ஸ் என்ற ஆங்கிலேய ராணுவ வீரருக்கு கர்னலாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
அவர் தனது போர்க்கால நினைவுகள் பற்றிய புத்தகத்தில் பாளையங்கோட்டைக்குள் எப்படி நுழைந்தோம் என்பது பற்றி எழுதியுள்ளார். எனவே, இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க கோட்டையின் மேற்கு வாசல் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்து வந்தது. அதை புனரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது புனரமைக்கப்பட்டு முதலமைச்சர் திறந்துள்ளார்.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகுதான், பாளையங்கோட்டை தனி நகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, "தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு" என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பல்வேறு கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டதால் அது ஒரு பெரிய நகரமாக உருவாக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.
1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோட்டை அழிந்துவிட்டாலும் கூட, அதன் வாசலை புனரமைப்பு செய்திருப்பதன் மூலம் அக்கோட்டைக்கு உயிரூட்டியிருப்பது போன்று உள்ளது. எனவே, வரும் தலைமுறையினருக்கு இக்கோட்டையின் நினைவுகளை இந்ந வாசல் எடுத்து செல்லும் என்பதை எண்ணி பெருமை கொள்வோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ”ஜெய்ஹிந்த் ” என முழங்கிய செயல் வீரர் செண்பகராமன்