திருநெல்வேலி: களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியில் சுற்றித்திரிந்த முத்து மனோ (27), சந்திரசேகர்(22) கண்ணன்(23) மாதவன் (19) ஆகிய 4 பேரிடம் அரிவாள்களும், நாட்டு வெடிகுண்டுகளும் களக்காடு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர்.
இன்று (ஏப்.22) நான்கு பேரும் ஸ்ரீவைகுண்டம் சிறையிலிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர். கைதிகள் அறைக்கு செல்லும் போது, சிறையிலிருந்து ஒரு பிரிவைச் சார்ந்த கைதிகள் அந்த நான்கு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கல்லால் தாக்கியதில் முத்து மனோ என்ற கைதி பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மற்ற 3 பேர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முத்து மனோ மீது களக்காடு, முறப்பநாடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. முத்து மனோவை தாக்கியது யார்? என்ன காரணத்துக்காக தாக்கப்பட்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.