தேனி மாவட்டம், பெரியகுளத்தில் துணை ஆட்சியராக ரிஷப், கடந்த 2021ஆம் ஆண்டு ஜீலை மாதம் பொறுப்பேற்றார். இவர் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே பெரியகுளம் தாலுகாவில் உள்ள வடவீரநாயக்கன் பட்டி, தாமரைகுளம், ஆகிய பகுதிகளில் அரசு நிலங்கள் தனியாருக்கு அரசு அலுவலர்களின் துணையோடு பட்டா வழங்கியதை கண்டறிந்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் வட்டாட்சியர், முன்னாள் ஆர்டிஒ-க்கள், நில அளவையர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதைக் கண்டறிந்து சம்மந்தபட்ட அரசு அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, அவ்வாறு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட, அரசு நிலம் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்த இவை தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு வசம் ஒப்படைக்கபட்டு, குற்றவாளிகள் கைது செய்யபட்டனர்.
இந்த நிலையில் அடுத்தபடியாக, மஞ்சளாறு அணைப்பகுதியில், அரசுக்கு சொந்தமான நிலத்தை சில தனியார்கள் ஆக்கிரமித்து இருந்ததைக் கண்டறிந்து அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அரசு ஆவணங்களை சரி பார்க்கும் பணியில் பெரியகுளம் துணை ஆட்சியர் ரிஷப், ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரியகுளத்தில் துணை ஆட்சியராக ரிஷப்பை, அதிரடியாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பகுதியின் துணை ஆட்சியராக, பணியிட மாற்றம் செய்து இன்று (மே31) தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது. மஞ்சளாறு பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்து இவரை பணியிட மாற்றம் செய்துள்ளதாகக் பலத் தரப்பிலிருந்தும் குற்றசாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
ரிஷப் பணியிடமாற்றம் குறித்து உயர் அலுவலர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, 'இது வழக்கமான பணியிட மாற்றம் தான்; பல சப் கலெக்டர்கள் இதுபோன்று, பணியிட மாற்றம் செய்யபட்டு உள்ளனர். இதற்கு வேறு எவ்வித அரசியல் காரணமும் இல்லை' எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்: அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு!